பயணத் திசைக்கான விளக்கப் படத்தை மறந்ததால், பாதி வழியில் மீண்டும் டெல்லி வந்த GO ஏர் விமானம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோ ஏர் நிறுவனத்தின் A320neo ரக விமானம், 146 பயணிகளுடன் டெல்லியில் இருந்து நேற்று தாய்லாந்து தலைநகரான பாங்காக்கை நோக்கி புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தான், பயணத் திசைக்கான விளக்கப் படம் கொடுக்கப்படாதது விமானிகளுக்கு தெரிய வந்துள்ளது. எந்தத் திசையில் பயணிக்க வேண்டும், விமான நிலையத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய விளக்கப் படம் இல்லாமல் விமானத்தை இயக்கும் பட்சத்தில், பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் டெல்லிக்குத் திருப்பினர்.


பின்னர் பயணத் திசை விளக்கப் படத்தைப் பெற்றுக் கொண்டு அந்த விமானம் பாங்காக் புறப்பட்டது. உள்நாட்டு வழித்தடங்களில் இயக்குவதற்காக இந்த விமானத்தை அண்மையில் தான் கோ ஏர் வாங்கியுள்ளது. வழக்கமாக பாங்காக் செல்லும் விமானம் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படவே, புதிய விமானம் இயக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே பாங்காக்கிற்கான பயணத் திசைக்கான விளக்கப் படம் அதில் இடம்பெறாமல் போய் விட்டதாக கோ ஏர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.