ஒரே நாடு..!!ஒரே வரி..!! : ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தது!!

பாராளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவில் அறிமுக விழா சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்ததுநாட்டில் முதன் முதலாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி இன்று நள்ளிரவு முதல் அமலானது.
பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து இதனை தொடங்கி வைத்தனர்.
நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி.(5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ) வரியை அமல் படுத்தியது மத்திய அரசு. இதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இனி ஒற்றை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பு முறையின் கீழ் வந்துள்ளனர்.
இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அவற்றுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது. இதேபோல் காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளிலும் சரக்கு, சேவை வரி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று நள்ளிரவு முதல் இந்த புதிய வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது.
ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்கான விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரவு 10.55 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வந்தார். அவரை வரவேற்று மைய மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்தது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ முறை செயல்படுத்தப்பட்டது.