குஜராத் விவகாரம்: பார்லிமென்டில் அமளி ராஜ்நாத் சிங் விளக்கம்
குஜராத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இரு அவைகளிலும் இந்த பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தால் ஏற்பட்ட அமளி காரணமாக ராஜ்யசபா பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்:- குஜராத்தில் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து பிரதமர் மோடியும் கவலை தெரிவித்ததுடன், கூர்ந்து கவனித்து வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 7 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பேரும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றார். மேலும் இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததுடன், கடந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான தாக்குதல்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார். இருப்பினும் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.