ஹெல்மெட் ரசீது காண்பித்தால் மட்டுமே இனி வாகனப்பதிவு...
இரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய முடியும் என மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது!
இரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய முடியும் என மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது!
கடந்த வியாழன் துவங்கி இரண்டு ஹெல்மெட்கள் கட்டாயம் என்ற விதி மத்திய பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர் சைலேந்திர ஸ்ரீவத்சவா தெரிவிக்கையில்., இரு சக்கர வாகன ஓட்டுநர் மட்டும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் என இருவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இரண்டு ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி வாகனப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.
அதன்படி ரசீதுகளை காண்பிக்காமல் இருந்தால் கட்டாயம் அந்த வாகனத்தை பதிவு செய்யக்கூடாது என அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
மேலும் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி Bureau of Indian Standards (BIS) விதிகளின்படி தயாரிக்கப்பட்ட, சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்களை மட்டுமே பயன்படுத்த வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் இந்த விதி முன்பிருந்தே அமலில் இருந்த போதிலும் தற்போது தான் கட்டாயப்படுத்தப்படுகிறது. அதேப்போல் தமிழகத்திலும் இரு ஹெல்மெட் விதிமுறை நடைமுறையில் இருக்கின்றது. எனினும் விதிகளை பின்பற்ற மக்கள் முன்வருவதில்லை.
இதற்கிடையில் சமீபத்தில் வாகனங்களில் சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிவது தொடர்பான சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நான்கு சக்கர வாகனங்களில் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டியது அவசியம் என்றும், கட்டாய ஹெல்மெட், அணிவதை காவல்துறையினர் முதலில் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. மேலும் இந்த ஹெல்மெட் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.