உ.பியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்?
உத்தரபிரதேச மாநில பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக்குவது தொடர்பான செய்தியை ராஜ்நாத் சிங்கிடம் கட்சியின் தலைவர்கள் எடுத்துரைத்து உள்ளனர் என்றும் அவருடைய ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன் சமாஜ்வாடியும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதாவும், பகுஜன் சமாஜ் கட்சியும் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை கைப்பற்றியது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான பணியில் பாரதீய ஜனதா தீவிரமாக இறங்கி உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதில் பாரதீய ஜனதா உறுதியாக உள்ளது.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற செய்தி வந்துள்ளது. பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் 2 நாட்கள் நடக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தேசிய செயற்குழுவை பா.ஜனதா கூட்டுகிறது. கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கலந்துக்கொள்ளும் இக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படுவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.