காஷ்மீர் செல்கிறார் ராஜ்நாத்
காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் அங்கு அமைதி திரும்பவில்லை. இதன் பின்னணியில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் அங்கு சென்று ஆய்வு செய்தார். அம்மாநில முதல்வர் முப்தியும், மக்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே கலவரம் நடந்து கொண்டு உள்ளது. அம்மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் டில்லி வந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை மீண்டும் காஷ்மீர் செல்ல உள்ளார். அங்கு அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளார். அம்மாநில கட்சிகள் மற்றும் குழுக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள அவர், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.