சிலைகள் உடைப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
சிலைகள் உடைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு.
திரிபுராவில் லெனின் சிலை, தமிழகத்தில் பெரியார் சிலை, மேற்கு வங்கத்தில் ஷ்யாம் பிரசாத் முகர்ஸி, உத்தர பிரதேசத்தில் அம்பேத்தகர் சிலை உடைப்பு என சம்பவங்கள் தொடர்வதால் மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
ஏற்கனவே லெனின் சிலை மற்றும் பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தை அடுத்து, மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை உள்துறை அமைச்சகம் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஷ்யாம் பிரசாத் முகர்ஸி, உத்தர பிரதேசத்தில் அம்பேத்தகர் சிலை உடைக்கப்பட்டதால், மீண்டும் மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியதாவது:-
சிலைகள் உடைப்பு போன்ற சம்பவங்களால் பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.
சிலைகள் உடைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள் உடைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட காவல் ஆணையர் ஆகியோரின் கடமை என கூறப்பட்டு உள்ளது.