தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேல் நடித்திருப்பவர், டெல்லி கணேஷ். இவர் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன் என பலரது படங்களில் நடித்த இவர் தான் நடிக்கும் கேரக்டர்களால் பலரை ஈர்த்திருக்கிறார். இவர் குறித்து யாரும் அறியா பல தகவல்களை இங்கு பார்க்கலாம்.
டெல்லி கணேஷ் முதன்முதலில் நடித்த படம், பட்டின பிரவேசம். 1976ல் வெளியான இந்த படத்தை, கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். அதன் பிறகு 1981ஆம் ஆண்டு வெளியான எங்கம்மா மகாராணி படத்தில் ஹீரோவாக நடித்தார்.
கமல்ஹாசனுடன் அதிக படங்களில் சேர்ந்து நடித்த நடிகர்களுள் இவரும் ஒருவர். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இவர் கமலுக்கு வில்லனாக நடித்திருந்தார். திரைப்படங்களில் மட்டுமல்ல, பல தொடர்கள் மற்றும் குறும்படங்களில் கூட நடித்திருக்கிறார், டெல்லி கணேஷ்.
டெல்லி கணேஷிற்கு மகாதேவன் கணேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் கோலிவுட்டில் சில படங்களில் துணைக்கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார்.
டெல்லி கணேஷை பலர் சினிமாவில் வரும் குணச்சித்திர நடிகராக பார்த்திருக்கிறோம். ஆனால், இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்னர் என்ன செய்தார், என்ன வேலை பார்த்தார் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?
டெல்லி கணேஷ், 1964 முதல் 1976 வரை இந்திய விமானப்படையில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு சினிமா மீதிருந்த தீராத காதலால் திரையுலகிற்குள் நுழைந்தார்.
தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் இவர், இந்த ஆண்டில் வெளியான அரண்மனை 4 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இவரது உயிரிழப்பு, தமிழ் திரையுலகில் ஈடு செய்ய முடியாத ஒன்று என பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.