சபரிமலை வன்முறைச் சம்பவங்கள் குறித்த அறிக்கையை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில ஆளுநர் சதாசிவத்திடம் அளித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல் படுத்தும் முயற்சியில் மாநில அரசும், அதை தடுக்கும் விதத்தில் போராட்டகாரர்களும் பனிப்போர் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்வதற்காக இளம்பெண்கள், 50 வயதிற்கு குறைந்த பெண்கள் முயன்று திரும்பி சென்றனர்.


இந்நிலையில் வரும் ஜனவரி 14-ஆம் நாள் மகரஜோதி தரிசனம் நடைபெறவதையொட்டி; கடந்த டிசம்பர் 30-ஆம் நாள் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக தற்போது சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜனவரி 2-ஆம் நாள் கனகதுர்கா(44), பிந்து(42) என்னும் இரு பெண்கள் சபரிமலை கோவிலில் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவத்தை அடுத்து, கேரளா முழுவதும் போராட்டங்கள் வலுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் நிலவும் வன்முறை குறித்தும், வன்முறையை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் அறிக்கை கோரியிருந்தார்.



இந்நநிலையில், சபரிமலை வன்முறை குறித்து பினராயி விஜயன் அரசு அறிக்கை அளித்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "சபரிமலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 2012 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.


பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், 9,489 பேர் சங்பரிவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்" என குறிப்பிட்டப்பட்டுள்ளது.


மேலும் இந்த அறிக்கையில், திட்டமிட்டு எப்படி தாக்குதல் நடைபெற்றது என்றும் பெண் பக்தர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் மீது எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் விளக்கப்பட்டுள்ளது.