பிரதமரை கட்டிப்பிடித்தால் இந்தியாவில் கொள்ளையடிக்கலாம் -ராகுல் காந்தி தாக்கு
பிரதமரை கட்டிப்பிடித்தால் இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி முறையான தகவல்களை அளிக்காமல் ரூ 280 கோடி முறைகேடாக கடன் வாங்கி உள்ளார் என அவர் மீது கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளை அலுவலகத்தில் சுமார் 1.77 பில்லியன் மோசடி பரிவர்த்தனைகளை நடந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, மும்பையில் உள்ள வைர நகை வியாபாரியான நீரவ் மோடியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறை இன்று சோதனை நடத்தி உள்ளனர். நீரவ் மோடி மற்றும் அவரது மனைவி, சகோதரர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல் வந்துள்ளது.
ஆனால், கடந்த மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் வைர நகை வியாபாரியான நீரவ் மோடி கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார். அதில் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கும் வழிமுறைகள்,
By நீரவ் மோடி
1.மோடியை கட்டிப்பிடிக்க வேண்டும்
2.டாவோஸ் நகரில் சந்திக்க வேண்டும்
இந்த செல்வாக்கை பயன்படுத்தி,
A. ரூ 12 ஆயிரம் கோடி திருட வேண்டும்.
B. மல்லையாவை போல நாட்டை விட்டு ஓட வேண்டும். பின்னர் அரசாங்கம் அதை கவனிக்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.