பாராளுமன்றம் இன்று 2 வது நாளாக கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி அளிக்கவில்லை அவர் கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.


இதனால் அவையை நடத்த முடியாமல் சபாநாயகர் திணறினார். இந்த அமளி காரணமாக அவை 12.30 மணி வரை ஒத்திவைக் கப்பட்டது.சபை மீண்டும் கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இதே பிரச்சினையை கிளப்பினார்கள். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இந்த அமளி காரணமாக சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 


முன்னதாக ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் , திரிணாமுல் காங்கிரஸ் , இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.


டெல்லி மேல்சபையிலும் ரூபாய் நோட்டு விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையபகுதிக்கு வந்து கோஷமிட்டனர். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக டெல்லி மேல்சபை 4 முறை ஒத்திவைக்கப்பட்டது  முதலில் 11.30 மணி வரையும், 2 -வது முறையாக 12 மணி வரையும், 3-வது முறையாக 12.30 மணிவரையும், தற்போது அதை தொடர்ந்து 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.


மீண்டும் எதிர் கட்சி உறுப்பினர்களின் அமளி ஈடுபட்டதால் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.