இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1.4 லட்சத்தை எட்டியுள்ளது, திங்களன்று ஏழாயிரம் பேருக்கு புதிதாக தொற்று பரவியிருக்கிறது. எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பு குறித்து கவலைப்படக்கூடாது என்று கான்ட் கூறுகிறார். எண்களை பார்த்து கவலையடைவதை விட,  பலவீனமான குழுக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது உகந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறப்பம்சங்கள்
இந்தியாவில் தொடர்ந்து ஏழாவது நாளாக அதிக அளவில் புதிதாக தொற்று  ஏற்பட்டுள்ளது செவ்வாயன்று, 6,535 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, மொத்த எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்ந்துள்ளது. உலகமே இந்த பெருந்தொற்றுக்கு  மத்தியில் சிக்கித் தவிக்கிறது
 
புது டெல்லி
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் சாதனை அளவை எட்டுகிறது.  சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, மே முதல் தேதியில் இருந்து கொரோனா பாதிப்பு வழக்குகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன.  அதுமட்டுமல்ல,  இறப்பு விகிதமும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், குறைந்தது 6 மாதங்களில் COVID-19 தடுப்பு மருந்துகளின் பரிசோதனைகள் தொடங்கப்படலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்தியாவில் நான்கு வகையான தடுப்பு மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார். விரைவில் நமக்கு பயனுள்ள மருந்துகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.


முதல் 10 நாடுகளில் இந்தியாவின் பெயர்
இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாஸிடிவ் தொற்று உறுதி செய்யப்பட்ட்தை அடுத்து,  உலகளாவிய தொற்று பட்டியலில் இந்தியா 10 வது இடத்தைப் பிடித்தது, அதோடு கொரோனாவின் ஆரம்பகால ஹாட்ஸ்பாட்டாக இருந்த இரானையும் முந்திவிட்டது. “புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஆய்வகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ் திரிபு தடுப்பு மருந்தை உருவாக்க பயன்படும், மேலும் இந்த திரிபு வெற்றிகரமாக பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு  கொடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு இதை கொடுத்து, பரிசோதிக்கும் நடைமுறை குறைந்தது ஆறு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநரும், ஐ.சி.எம்.ஆரின் தலைவருமான டாக்டர் ரஜ்னி காந்த் தெரிவித்தார்.
 
வயதானவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்- காந்த்
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1.4 லட்சத்தை எட்டியுள்ளது, திங்களன்று ஏழாயிரம் பேருக்கு புதிதாக தொற்று பரவியிருக்கிறது.  எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பு குறித்து கவலைப்படக்கூடாது என்று கான்ட் கூறுகிறார். எண்களை பார்த்து கவலையடைவதை விட,   பலவீனமான குழுக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது உகந்தது என்று ஐ.சி.எம்.ஆரின் தலைவர் ரஜ்னி காந்த் கூறுகிறார். எண்களைக் காட்டிலும் பலவீனமான குழுக்களைப் பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் இது குறித்து மேலும் பல கருத்துக்களை தெரிவித்த அவர், 'கோவிட் -19 இன் பாதிப்பு அதிகரிப்பதைப் பற்றி நாம் பயப்படக்கூடாது. ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு தேவை. இவர்கள்தான் மிகவும் பலவீனமான குழுவினர். இவர்களுக்கு போதுமான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும், இறப்பு விகிதத்தை குறைவாக வைத்திருக்க உத்திகளை வகுக்க வேண்டும்.


இந்தியாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவு 
ஆரம்பத்தில் இந்தியாவிற்கு ஆயிரக்கணக்கான வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என்று நம்ப்ப்பட்ட நிலையில் இந்தியாவில்  COVID-19 பாதிக்கப்பட்டவர்களில் 0.45 சதவிகிதத்தின்ருக்கு மட்டுமே வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுவதாக சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் கூறியது. ஐந்து முதல் 10 சதவிகிதம் வரையிலான தீவிர நோயாளிகள் மீதுதான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ரஜ்னி காந்த் வலியுறுத்தினார்.   “நாங்கள் நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை செய்து வருகிறோம், கோவிட் பாதித்தவர்களின் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிகவும் குறைவு.  தடுப்பு மருந்து இல்லாத நிலையில், அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களையும், தனிநபர் இடைவெளியையும் மக்கள் பின்பற்ற வேண்டும், இதுதான் மிகவும் பயனளிப்பதாக இருக்கும். '


WHOவின் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் துரிதமான அதிகரிப்பை சமாளிப்பதற்காக பிரேசில் மற்றும் இந்தியா மட்டுமல்ல, உலகமே போராடிவருகிறது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் சிக்கி, உலகப் பொருளாதாரமே பின்னடைவை சந்தித்திருக்கிறது. பொருளாதாரத்தை விரைவாக இயல்புப் பாதையில் திரும்பக் கொண்டுவதற்காக விமானச் சேவைகளை தொடங்கியிருப்பது கவலைகளை ஏற்படுத்துவதாக மூத்த சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.


“இப்போது நாம் பெருந்தொற்றின் இரண்டாவது  கட்டத்தில் இல்லை. உலகளவில் அதன் முதல் கட்டத்தின் நடுவில் இருக்கிறோம், அதாவது நோய்  மேலும் மேலும் அதிகரித்து வரும் ஒரு கட்டத்தில் தான்இருக்கிறோம்" என்று  உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக் ரியான் கூறுகிறார்.   தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் பிற பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி அவர் கவலை தெரிவிக்கிறார்.


தொடர்ச்சியாக ஏழாவது நாளாக அதிக அளவிலான பாதிப்பு
இந்தியாவில் தொடர்ந்து ஏழாவது நாளாக அதிகமான அளவில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. செவ்வாயன்று, 6,535 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, மொத்த எண்ணிக்கை 1,45,380 ஆக அதிகரித்துவிட்டது. இதுவரை மொத்தம் 4,167 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதியிலும் இந்த வைரஸ் வேகமாக பரவியுள்ளது.  தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் எவ்வளவு பெரிய சவாலை எதிர்கொள்கிறது என்பதைக் காட்டுவதாக இது இருக்கிறது. இந்தியாவில் பெருமளவிலான பாதிப்பு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் ஏற்பட்டிருக்கின்றன. லாக்டவுனால் நாட்டின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த இட்த்திற்கு திரும்பி வருவதால் நாட்டின் கிழக்கு மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு திங்களன்று உள்நாட்டு வர்த்தக விமான சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.


பிரேசிலில் 3,75,000 நோய்த்தொற்று பாதிப்பு
இதற்கிடையில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் முயற்சிக்கு உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பு பின்னடைவைக் கொடுத்திருக்கிறது.  தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் போதுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  அமெரிக்காவில் 16 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு முதல் இடத்தை பிடித்திருக்க, 3,75,000 பேருக்கு நோய்த்தொற்று பதிவான பிரேசில்  இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலில், கோவிட் -19 பாதித்த 23,000 பேர் இறந்தனர். பிரேசிலில் நோய்த்தொற்றின் அதிக விகிதம் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இருந்தாலும் மக்களை வீட்டிற்குள் வைத்திருக்கத் தேவையான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரியான் அறிவுறுத்தியுள்ளார்.


(மொழியாக்கம் - மாலதி தமிழ்செல்வன்)