உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் 'தேசிய ஜனநாயக கூட்டணி அரசு' பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் பங்கேற்ற பிரதமர் பேசியதாவது:


நான் நாட்டின் பிரதமர் இல்லை, நாட்டுக்கா சேவை செய்யும் சேவகன் என்றார்.  நாங்கள் ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகாலம் முடிந்து விட்டது. எனவே எங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை என்றார்.


இந்த இரண்டு வருடமாக நாடு நல்ல மாற்றத்தை சந்தித்து வருகிறது. மாற்றம், முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னும் சிலரின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.


நமது சமூகத்தில் பெண்கள் முன்னேறவில்லை என்றால் நமது நாடும் முன்னேறாது. எனவே பெண் குழந்தைகளை காப்பது நமது கடமை. பெண்களின் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை எப்போதும் அளிக்கிறது.


எனது ஆட்சியில் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கப்படும். அவர்களின் துயரத்தை துடைத்து விவசாயத்தை ஊக்குவிப்போம். சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கவேண்டும், இல்லையெனில் கடும் பின்விளைவுகளை சர்க்கரை ஆலைகள் சந்திக்க நேரிடும்.சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 


ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர்த்த பல புதிய பள்ளிகள் திறப்பது, மருத்துவமனைகள் கட்டுவது, சாலைகள் அமைப்பது ஆகிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


நம் நாடு முழுவதும் டாக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. சில மாநிலங்களில் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 60 ஆகவும் வேறு சில மாநிலங்களில் 62 ஆகவும் உள்ளது. நாட்டில் புதிதாக மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப டாக்டர்களின் எண்ணிக்கை இல்லை. போதிய டாக்டர்கள் இல்லாமல் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது.


எனவே நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்.


இந்திய டாக்டர்கள் ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி இலவசமாக ஏழை கர்ப்பிணி பெண்களின் நலனுக்காக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் ஓராண்டில் 12 நாட்கள் ஏழை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக சிகிச்சை கிடைக்கும்.


ஏழைகளின் வீடுகளில் காஸ் அடுப்பு எரிய ஒரு கோடி குடும்பங்கள் தங்கள் சமையல் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளன. அதேபோல டாக்டர்களும் மாதம் ஒரு நாள் ஏழை கர்ப்பிணிகளுக்கு சேவை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


எனது ஆட்சியில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட நிதி 65 சதவீதம் ஆகும். ஆனால் மத்திய அரசு 35 சதவீத நிதியை மட்டுமே பெற்றுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. இதை நினைத்து நான் பெருமை படுகிறேன்


கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு மீது சிறு ஊழல் புகார்கூட எழவில்லை. எதிர்க்கட்சிகளால்கூட எங்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என தனது உரையை முடித்தார்.