மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் 2 வது நாளாக வருமான வரி சோதனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் , மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று டெல்லியில் இருந்து வந்த வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர், போபால் மற்றும் டெல்லி, கோவா உள்ளிட்ட 50 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதில் கமல்நாத்தின் சிறப்பு உதவி அதிகாரியாக இருந்த பிரவீன் கக்காரின் வீட்டில் இருந்து நேற்று 10 கோடி ரூபாய் கைப்பற்ப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் 281 கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக ஆவணங்களும் சிக்கியதாக கூறப்பட்டது.


இந்த நிலையில் இந்தூரில் உள்ள பிரவீன் கக்காரின் வீடு மற்றும் அவரது உதவியாளர் அஷ்வின் ஷர்மாவின் இல்லம் உள்பட பல்வேறு இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று சோதனை நடைபெறும் வீடுகளுக்குள் உள்ளுர் காவல்துறையினர் செல்ல முயன்றதால் சிஆர்பிஎப் வீரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட நகைகள், ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருககிறது. அதே சமயம் சோதனைக்கு ஒத்துழைக்காமல், ஊழல்வாதிகளை முதலமைச்சர் கமல்நாத் காப்பாற்ற முயற்சிப்பதாக முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் குற்றம்சாட்டியிருக்கிறார். மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்ததைப் போன்று வருமான வரித்துறை சோதனையை தடுக்க கமல்நாத் முயற்சிப்பதாக சவுகான் கண்டனம் தெரிவித்தார்.