குற்றம் நிரூபிக்கப்பட்டால் நானே தூக்குப்போட்டுக்கொள்வேன்... மல்யுத்த சங்க தலைவர் ஆவேசம்!
Wrestlers Protest In Delhi: தன் மீது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும், தானே தூக்கிட்டுக்கொள்வேன் என பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
Wrestlers Protest In Delhi: மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங், தன் மீது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் தூக்கிட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்பியான பிரிஜ் பூஷண் சரண் சிங், அனைத்து மல்யுத்த வீரர்களும் தனது குழந்தைகளைப் போன்றவர்கள் என்றும், அவர்களின் ரத்தமும் வியர்வையும் அவர்களின் வெற்றிக்கு சென்றிருப்பதால் அவர்களைக் குறை கூற மாட்டேன் என்றும் கூறினார்.
நான்கு மாதங்கள் ஆகின்றன...
டெல்லியில் உள்ள ராம்நகர் பகுதியின் மகாதேவா அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சிங்,"என் மீது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும், நான் தூக்கிட்டுக்கொள்வேன் என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.
என்னை தூக்கிலிட வேண்டும் என்று அவர்கள் (மல்யுத்த வீரர்கள்) விரும்பி நான்கு மாதங்கள் ஆகின்றன, ஆனால் அரசாங்கம் என்னை தூக்கிலிடவில்லை, எனவே அவர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் மூழ்கடிக்கப் போகிறார்கள். பதக்கங்களை கங்கையில் வீசுவதால் பிரிஜ் பூஷண் தூக்கிலிடப்பட மாட்டார். உங்களிடம் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் கொடுங்கள், நீதிமன்றம் என்னை தூக்கிலிட்டால், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.
'மல்யுத்தத்தில் வாழ்ந்திருக்கிறேன்'
வீரர்கள் அனைவரும் என் குழந்தைகள் போன்றவர்கள். சில நாட்களுக்கு முன்பு வரை என்னை மல்யுத்தக் கடவுள் என்றே அழைத்தனர். மல்யுத்தக் கூட்டமைப்புத் தலைவராக நான் பொறுப்பேற்றபோது உலக அளவில் இந்தியா 20ஆவது இடத்தில் இருந்தது. இன்று எனது கடின உழைப்பால் உலகின் சிறந்த ஐந்து மல்யுத்த அணிகளில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
நான் இரவும் பகலும் மல்யுத்தத்தில் வாழ்ந்திருக்கிறேன். ஏழு ஒலிம்பிக் பதக்கங்களில் ஐந்து (மல்யுத்தத்தில்) எனது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு வந்தன. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" என்றார். வரும் ஜூன் 5ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் "ஜன் சேத்னா மகா பேரணியில்" மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்டு வழக்குகள்
பிரிஜ் பூஷண் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி ஏப்ரல் 23ஆம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை தொடர்ந்து அந்த கட்டடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்ல முயன்றதால் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைதானார்கள்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி காவல்துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. முதல் எஃப்.ஐ.ஆர் ஒரு மைனர் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பானது மற்றும் இது போக்சோ சட்டத்தின் விதிகளின் கீழ் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பதிவாகியுள்ளது. மற்றொரு எஃப்.ஐ.ஆர்., பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் கண்ணியமின்றி நடந்துகொண்ட புகார்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ