ராமர் பாலத்தின் கட்டமைப்பு பற்றி ஐசிஎச்ஆர் ஆய்வு
ராமேசுவரத்துக்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலத்தின் கட்டமைப்பு குறித்து இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎச்ஆர்) ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த ஆய்வின்போது ராமர் பாலம் இயற்கையாகவே அமைந்ததா? அல்லது மனிதர்களால் கட்டப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்தியாவின் ராமேசுவரத்துக்கும், இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன பகுதிதான் ராமர் பாலம் உள்ளது. ராமாயண காலத்தில் ராமர் இலங்கைக்கு சென்று சீதையை மீட்பதற்காக வானரப் படைகளைக் கொண்டு இந்த பாலத்தைக் கட்டினார் என்று கூறப்படுகிறது
இந்தப் பாலம் அமைந்துள்ள பகுதி ஆழமின்றி காணப்படுவதால், கப்பல்கள் இதனைச் சுற்றி வந்து சுமார் 400 கி.மீ. தூரம் கூடுதலாக பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரில் கடலை ஆழப்படுத்தும் திட்டத்தை கடந்த 2005-ம் ஆண்டில், அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடங்கியது. எனினும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து 2009-ஆம் ஆண்டில் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் ஒய்.சுதர்சன் ராவ், டெல்லியில் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியது:-
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் முன்னோடித் திட்டமாக ராமர் சேது பாலத்தின் கட்டமைப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். ராமர் சேது பாலம் இயற்கையாகவே அமைந்ததா? அல்லது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டதா? என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வருவதுதான் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். ஐசிஎச்ஆர்-தான் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. தேவை ஏற்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடுவோம்.
வரலாற்று ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கடல்சார் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் ஆய்வுக்குழுவில் இடம் பெறுவார்கள். குழுவில் இடம் பெறுபவர்களை தேசிய அளவில் உள்ள பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து தேர்வு செய்வோம். இதற்காக மே அல்லது ஜூன் மாதத்தில் இரு வார பயிற்சிப் பட்டறை நடத்தப்படும் என்று இவ்வாறு கூறினார்.