இந்தியாவை யாராவது தாக்க நினைத்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கு பதிலடி தருவோம் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கையை எதிர் காலத்தில் மறுசீராய்வு செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். 


ராஜ்நாத் சிங் அவர்களின் கருத்திற்கு மறைமுகமாக பதில் அளிக்கும் வகையில் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கை எங்களுக்கு கிடையாது என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.



இந்நிலையில், இந்தியாவை யாராவது தாக்க நினைத்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கு பதிலடி தருவோம் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது பாக்கிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.


டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் ஆற்றிய முக்கிய உரைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு நூல் வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.  


மேலும் அவர் தெரிவிக்கையில்., 'சமீபகாலமாக நம்மை சீண்டிப் பார்ப்பவர்களை நாம் ஏதும் செய்யாமல் இருந்து வருகிறோம். ஆனால், யாராவது நம்மை தாக்கினால் அவர்கள் தங்களது வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுவதும் மறக்க முடியாதவாறு சரியான பதிலடி கொடுக்கப்படும்.


நம்மை சீண்டிப் பார்ப்பவர்கள் உள்பட அனைவரும் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்’ எனவும் எச்சரித்துள்ளார்.