டெல்லி: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) அழைப்பு விடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவ துறையில் பல மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுக்கும் அதிமுக, இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 


இந்த மசோதா மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவை எதிர்த்த போதிலும், மக்களவையில் போதிய அளவுக்கு பெரும்பான்மையை என்.டி.ஏ அரசு கொண்டுள்ளதால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதாவது இந்த மசோதாவுக்கு ஆதரவாக 260 பேரும், எதிர்த்து 48 பேரும் ஓட்டு போட்டனர்.


இந்தநிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு முழுவதிலும் மருத்துவர்கள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்க்கான அழைப்பை இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) விடுத்துள்ளது. 


இதுக்குறித்து இந்திய மருத்துவ சங்கம் கூறுகையில், இந்த மசோதாவில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்படும். அந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனை குழு அமைக்கப்படும் எனக் கூறப்பட்டி உள்ளது. இது பெரும் ஆபத்தானது. அப்படி செய்தால் நாட்டில் ஏழைகள் மருத்துவராக முடியாது. பணக்காரர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலை ஏற்படும் எனத் தெரிவித்தனர். 


ஐ.எம்.ஏ தலைவர் சந்தானு சென் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாராளுமன்றமாக இருந்தாலும் சரி, வீதியாக இருந்தாலும் சரி, அனைவரின் உரிமைகளுக்காக எப்போதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நிற்ப்பார்கள்" எனக் கூறியுள்ளார்.