சத்தியத்திற்கு சோதனை ஏற்படலாம்…. ஆனால் அதை தோற்கடிக்க முடியாது: Sachin Pilot
ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்
காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் பதவி நீக்கம் செய்யப்பட்டார்
கடுமையான நிலைப்பாட்டை எடுத்த காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) சச்சின் பைலட்டை ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநிலக் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கியது. முதல்வர் அசோக் கெஹ்லோட்டுக்கு எதிராக கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்த, இரண்டு ராஜஸ்தான் அமைச்சர்களும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பைலட்டை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவால் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். ஜெய்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், காங்கிரஸ் அவரை நீக்க முடிவு செய்தது.
ALSO READ | கெஹ்லாட் அரசுக்கு நெருக்கடி! முதல்வர், பைலட், சுயேச்சைகளுக்கு காவல் துறை நோட்டீஸ்
"காங்கிரஸ் சச்சின் பைலட் 30களின் வயதில் இருந்த போது ஒரு மத்திய அமைச்சராக்கியது, அவரது 40களின் வயதில் ஒரு துணை முதல்வராக இருந்தார். நாங்கள் சச்சின் பைலட்டுக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். அவர் ஒரு எம்.பி. இணை அமைச்சர் மற்றும் மாநில கட்சி தலைவராக இருந்துள்ளார். சச்சின் பைலட் மற்றும் அவரது சகாக்கள் சிலர் பாஜக விரித்த வலையில் விழுந்ததில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இது ஏற்றுக்கொள்ள முடியாதது,”என்றார் சுர்ஜேவாலா.
இதற்கு பதிலளித்த சச்சின் பைலட், சத்தியத்திற்கு சோதனை ஏற்படலாம், ஆனால் அதை தோற்கடிக்க முடியாது என்று ஒரு ட்வீட் மூலம் பதிலளித்தார்.
சிகார் காங்கிரசின் முன்னாள் தலைவர் கோவிந்த் சிங் டோடஸ்ரா (Congress Govind Singh Dotasra) , ராஜஸ்தான் காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் அசோக் கெஹ்லோட்டின் (Ashok Gehlot) அமைச்சரவையில் டோட்டாஸ்ரா மாநில அமைச்சராகவும் உள்ளார். இளைஞர் காங்கிரஸ் அணியின் புதிய தலைவராக இளம் எம்.எல்.ஏ, கணேஷ் கோக்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பைலட் முகாமில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் விஸ்வேந்தர் சிங், ரமேஷ் மீனா மற்றும் தீபந்தர் சேகாவத் ஆகியோர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் “திரு. சச்சின் பைலட்டின் தலைமையில் கட்சியை பலப்படுத்தி, ராஜஸ்தானில் ஆட்சியை கொண்டுவர கடந்த 6 ஆண்டுகளில் நாங்கள் கடினமான முயற்சிகளை மேற்கொண்டோம். மாநில சட்டசபையில் மிக குறைந்த தொகுதியை வைத்திருந்த நிலையில், கட்சி ஆட்சியை பிடிக்க நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். எங்கள் தலைவர் சச்சின் பைலட்டை பகிரங்கமாக அவமானப்படுத்துவது எங்களால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதற்கு காரணமானவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
ALSO READ | சீனா திரும்ப காத்திருக்கும் தமிழக பரோட்டா மாஸ்டர்கள்: சுவாரஸ்யமான மறுபக்கம்
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல்வர் கெஹ்லாட்டுக்கு எதிராக கிளர்ச்சி எழுப்பியதோடு, தனக்கு விசுவாசமுள்ள எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியை விட்டு வெளியேறலாம் என்று கட்சிக்கு அனுப்பப்பட்ட செய்தியை அடுத்து ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி தொடங்கியது. 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக பைலட் சில நேர்காணல்களில் கூறினார்.
இதற்கிடையில், ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஃபேர்மவுண்டில் நடந்த சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் 102 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதை அடுத்து, முதல்வர் கெஹ்லாட் செவ்வாய்க்கிழமை மீண்டும் தனது பலத்தை நிரூபித்தார். 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில், அரசாங்கத்தை காப்பாற்ற 101 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.