பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து  உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் கேரளாவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களும் பலத்த போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து, பல சர்ச்சைகளும் சம்பவங்களும் நிகழ்ந்தவண்ணம் உள்ளதால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.   


இதை தொடர்ந்து, சபரிமலை விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க தேவசம் போர்டுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் தேவசம் போர்டு தலைமையகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை அணுக தேவசம் முடிவு செய்து இருப்பதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்து உள்ளார்.


தேவசம் போர்டு தனது மரியாதையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. எப்போது சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு செய்வது என்பது குறித்து டெல்லியில் உள்ள வக்கீல்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு செய்யப்படும். தேவசம் போர்டு எடுத்திருக்கும் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து  உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும். வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தள்ளார்.