காங்கிரஸ் தலைவராக செப்டம்பர் மாதத்தில் ராகுல் காந்தி தேர்வு?
சமீபத்தில் நடந்து முடிந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சரிவையே சந்தித்தது. இந்நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியில் உள்ள இளம் நிர்வாகிகள் முன்வைக்க தொடங்கி உள்ளனர். ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர், திக்விஜய் சிங் போன்ற பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி தலைவராக வரவேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இதனால், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரைவில் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வண்ணம் இருந்தது. இதற்கிடையே, தீவிர அரசியலில் பிரியங்கா காந்தி ஈடுபட போவதாக கூறப்பட்டு நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பெயர் வெளியிடாத கட்சியின்மூத்த நிர்வாகி ஒருவர் இத்தகவலை உறுதிப்படுத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்சியில் பெரும் மாற்றம் ஏற்படும். மூத்த தலைவர்கள் பலருக்கு கட்சி பதவிகளில் இருந்து ஓய்வளிக்கப்படும். இளைஞர்கள் பலருக்கு வாய்ப்புகள் வழங்கப் படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.