தியாகமும் வீரமும் தந்த வரம் நம் சுதந்திரம்: உலகே வியந்த சுதந்திர போராட்டம்.... சற்று திரும்பிப் பார்ப்போம்
Independence Day 2024: உதவி கேட்டு எந்திய கைகள் உரிமை கேட்கத் தொடங்கின. ஏக்கத்துடன் இருந்த மனங்களுக்கு அடிமைத்தனத்தின் தாக்கம் புரிந்தது. ஏங்கிய நெஞ்சங்கள் சுதந்திர உணர்வுகளை தாங்கிய நெஞ்சங்களாயின.
Independence Day 2024: இந்தியர்களாகிய நாம் இன்று நமது 78வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடி வருகிறோம். இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று, ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தின் பயனால் அடிமைகளாய் இருந்த நம் நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் துவங்கினர். 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு சகாப்தத்தின் புதிய தொடக்கத்தைப் பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது.
இன்று டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார். நாடு முழுதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. உலகின் முன்னோடியாய் இருக்கும் நாடான இந்தியாவின் குடிமக்கள் நாம் என்ற பெருமிதம் நம் அனைவருக்கும் உள்ளது. நாம் இன்று உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறோம். உலகின் பல நாடுகள் நம்மிடம் பாடம் கற்கின்றன. பல நாடுகளுக்கு பல வழிகளில் நாம் உதவி செய்து வருகிறோம். உலக நாடுகள் அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் நாம் பல சாதனைகளை செய்து வருகிறோம்.
பாருக்குள்ளே நல்ல நாடு
பாருக்குள் ஒரு புனித பூமியாய், வழிகாட்டியாய், ஆசானாய் நம் இந்தியா விளங்குகிறது. பல துறைகளில் நாம் முன்னோடியாய் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். தினம் தினம் நமது நாட்டில் திருவிழாதான். பல மொழிகள், மதங்கள், உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் என பலவித வண்ணங்கள் சேர்ந்த ஒரு அழகுமிகு ஓவியமாய் இந்தியா மிளிர்ந்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமைக்கு நமது நாட்டைக் காட்டிலும் ஒரு மேன்மையான உதாரணத்தை காட்டிவிட முடியாது.
சுதந்திரத்துக்கு உரம் போட்ட உன்னத உள்ளங்கள்
இன்று நாம் சுதந்திரமாய் வாழ்கிறோம். ஆனால், இந்த நிலை அத்தனை எளிதாக வந்துவிடவில்லை. இதற்காக ஏராளமானோர் தங்கள் வாழ்க்கை, குடும்பம், உயிர் என அனைத்தையும் தியாகம் செய்துள்ளார்கள். இன்று விண்ணை நோக்கி பறக்கும் நாம் ஒரு காலத்தில் அன்னியனுக்கு அடிமைப்பட்டிருந்தோம். பேசவும், நடக்கவும், சிரிக்கவும் அனுமதி பெற வேண்டிய அவல நிலை இருந்தது. சுதந்திரத்திற்கான போராட்டம் மிக நீண்டதாகவும் மிக தீவிரமானதாகவும் இருந்தது.
உயிரை துச்சமாக நினைத்து விடுதலையை மேலாக மதித்த மனங்கள்
பல சுதந்திர போராட்ட வீரர்களின் நாட்டுப்பற்று, விடா முயற்சி, சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவை நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரத்தின் அடித்தளமாக இருக்கின்றன. பலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் சுதந்திர போராட்டத்திற்காக அர்ப்பணித்தனர். அதற்கான அவர்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை என்பதே இதன் சிறப்பம்சம். எப்படியாவது என் நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதே ஒரே எண்ணமாக இருந்தது. மகன், தந்தை, கணவன் என விடுதலை போராட்டத்திற்காக வீட்டை விட்டு சென்றவர்களின் வருகைக்காக காத்திருந்த குடும்பங்களின் கதைகள் இங்கே ஏராளமாக உள்ளன. விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் சொல்லி மாளாத அளவில் இருந்தது.
முதலில் அடிமைத்தனமே வழக்கமாகிவிடுமோ என்ற அபாயகரமான நிலை இருந்தது. ஆனால், சிறிது சிறிதாக மக்கள் மனதில் விடுதலைக்கான வேட்கை தொடங்கியது. அஞ்சி வாழ்ந்தால் அடிமைத்தனம் நிலையாகிவிடும் என்பதை புரிந்துகொண்ட மக்கள், குரல் எழுப்பி உரிமை முழக்கம் செய்யத் தொடங்கினர். நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் அரசியல் செய்வதை மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குட்ட குட்ட எழுந்தனர். ஆனால், ஆங்கிலேயர்களிடம் ஆயுத பலமும், ஆள் பலமும் இருந்தது. இந்திய சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களிடம் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணமும் நாட்டுப்பற்றும் மட்டுமே இருந்தன. இவற்றையே தங்கள் உந்துசக்தியாக்கி உத்வேகத்துடன் போராடினர்.
உதவி கேட்டு எந்திய கைகள் உரிமை கேட்கத் தொடங்கின. ஏக்கத்துடன் இருந்த மனங்களுக்கு அடிமைத்தனத்தின் தாக்கம் புரிந்தது. ஏங்கிய நெஞ்சங்கள் சுதந்திர உணர்வுகளை தாங்கிய நெஞ்சங்களாயின. இறுதியாக, பலரது தியாகத்தின் விளைவாக இந்தியா விடுதலை பெற்றது. சுதந்திர போராட்ட வரலாற்றை இன்று கதையாய் படிக்கிறோம். படிக்கும்போதே நம் மனம் பதபதைக்கிறது. ஆனால், நம் நாட்டவர் இதை வாழ்க்கையாய் வாழ்ந்துள்ளார்கள். அதை சற்று எண்ணிப்பார்த்தால், அப்படி போராடி பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை நாம் எவ்வாறு பேணிக்காக்க வேண்டும் என்பது புரியும்.
சுதந்திரம் என்பது வெறும் சொல்லோடு இல்லாமல், நம் வாழ்விலும், உணர்விலும், உயிரிலும் பின்னிப்பிணைந்துள்ளது. இன்றைய சந்ததியினர் நம் சுதந்திர வரலாற்றை நெஞ்சில் கொண்டு, நம் நாடு தினம் தினம் அடைந்துவரும் முன்னேற்றத்தின் பெருமை கொண்டு, நாட்டுப்பற்றுடன் நாட்டு முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்! சுதந்திரத்தை போற்றுவோம்!!
மேலும் படிக்க | சுதந்திர தினம், குடியரசு தினம் கொடியேற்றுவதில் இந்த வித்தியாசத்தை கவனிச்சீங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ