கர்த்தார்பூர் நடைபாதை குறித்து இந்தியா மற்றும்  பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாகா: கர்தார்பூர் நடைபாதையின் முறைகள் மற்றும் பிற தொழில்நுட்ப சிக்கல்களை இறுதி செய்ய இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு காலை 10 மணிக்கு அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சார்பில் ஈடுபட இருந்த குருதுவாரா பிரபந்த கமிட்டியின் 10 நபர் குழுவில் இருந்த காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் திடீரென நீக்கப்பட்டதால், காலிஸ்தான் ஆதரவாளர்களை பகடையாகப் பயன்படுத்த நினைத்த பாகிஸ்தானின் திட்டம் நிறைவேறவில்லை.


காலிஸ்தான் சீக்கியர் தீவிரவாத இயக்கத்தை ஆதரிப்பவரான கோபால் சிங் சாவ்லா பாகிஸ்தானின் ஹபீஸ் சையத்துக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். அவர் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக பிரபந்த கமிட்டி அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை தொடங்க இருந்த சில நாட்களுக்கு முன்புதான் காலிஸ்தான் சீக்கியர் தீவிரவாத இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது.


கர்த்தார்பூர் செல்லும் பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து  இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே வாகா எல்லைப் பகுதியில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கர்த்தார்புர் குருதுவாராவை சீக்கியரின் முதல் குருவான குருநானக் கட்டியதாக கருதப்படுகிறது. இப்புனிதத் தலத்திற்கு விசா இல்லாமல் பக்தர்கள் இந்தியாவில் இருந்து எல்லைத் தாண்டி சென்று வர சுமார் 14 கிலோமீட்டர் பாதையை அமைக்கும் பணியில் இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்படிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளன.


குருநானக்கின் 550-வது பிறந்தநாளை ஒட்டி இந்த பாதை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே தயாராகி விடும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் பத்தாயிரம் பேர் இதன் மூலம் புனிதத் தலம் சென்று வர முடியும். இதனிடையே குருநானக்கின் பிறந்த இடமாக கருதப்படும் பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருதுவாராவில் வரும் 25 ஆம் தேதி முதல் 100 நாள் கீர்த்தனை நடைபெறுகிறது.