புத்தர் குறித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்தில் சர்ச்சை எதுவும் இல்லை: இந்தியா
புத்தர் குறித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்தில் சர்ச்சை எதுவும் இல்லை என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சனிக்கிழமை நடந்த ஒரு இணைய வழி கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தியாவின் தார்மீக தலைமை பற்றி பேசினார். அப்போது அவர் மகாத்மா காந்தி மற்றும் புத்தரின் போதனைகள் இன்றும் நாம் கடைபிடிக்க கூடியவையாக உள்ளன என குறிப்பிட்டார்.
இதற்கு நேபாள ஊடகங்கள், புத்தர் இந்தியன் என ஜெய்சங்கர் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டது.
இது பற்றி கருத்து தெரிவித்த, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியுறவு அமைச்சர் தனது உரையில், புத்தரை பற்றியும் குறிப்பிட்டார் என்றார்.
புத்தர் நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
முன்னதாக, இது குறித்து கருத்து தெரிவித்த, நேபாள வெளியிறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார் என்பது குறித்து சந்தேகத்திற்கிடமில்லாமல் வரலாற்று ஆதாரங்கள் உள்ளது என்றும், அப்பகுதி யுனெஸ்கோவின் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்திற்கு சென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அமைதியின் தூதராக உள்ள புத்தர் பிறந்த நாடான நேபாளம் என குறிப்பிட்டார்.
நேபாளத்தின் தோன்றிய புத்த மதம், உலகின் பிற நாடுகளுக்கு பரவியது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என இந்திய தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
ALSO READ | உண்மையில் கடவுள் ராமர் ஒரு நேபாளி; இந்தியர் அல்ல: நேபாள PM ஒலி!
முன்னதாக, ஒரு மாத காலத்திற்கு முன்பு, நேபாள பிரதமர் கே.பி.ஒளி ராமர் நேபாளத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டார். அது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத் தக்கது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மே 8 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தார்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சாலையை திறந்து வைத்தததில் இருந்தே, நேபாளம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்தியாவில் சில பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடம் ஒன்றையும் வெளியிட்டது.