ராமர் கோயில் கட்டுமானம் குறித்த பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியா கண்டனம்!
கொரோனா பீதிக்கும் மத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் குறித்து இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது
கொரோனா பீதிக்கும் மத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் குறித்து இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்தைத் தொடங்குவது தொடர்பாக, இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தனது இந்துத்துவா சார்ந்த நிலைப்பாட்டை முன்னெடுத்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் குற்றம் சாட்டியது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை வலுவாக கண்டித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு 'தலையீட்டுரிமை' இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“பாக்கிஸ்தானுக்கு தலையீட்டுரிமை இல்லாத ஒரு விவகாரத்தில் அது அளித்துள்ள ஒரு அபத்தமான அறிக்கையை நாங்கள் கண்டோம். பாகிஸ்தானில் உள்ள நிலைக்கு சிறுபான்மையினரைப் பற்றி குறிப்பிடக் கூட பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, எண்கள் பொய் சொல்லாது" என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "நீதித்துறையைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுடைய விதிமுறை இங்கு செல்லுபடி ஆகாது. நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு கொண்டு இவற்றைக் கையாளும் மற்ற இடங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் பற்றி பாகிஸ்தான் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும்." என்று தெரிவித்தார்.
"இந்தியா என்பது சட்டத்தால் ஆட்சி செய்யப்படும் ஒரு நாடு. இது அனைத்து மதங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம், சற்று நேரத்தை எடுத்துக் கொண்டு, அவர்களின் சொந்த அரசியலமைப்பைப் படித்தால், வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளலாம்" என்று அவர் கூறினார்.
புதன்கிழமை, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் (எஃப்ஒ) ஒரு அறிக்கையில் கூறியதாவது: "2020 மே 26 அன்று அயோத்தியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதி இடத்தில் கோவில் கட்டுமானம் தொடங்குவது இந்த திசையில் மற்றொரு படியாகும்… பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் இதற்கு வலுவான வார்த்தைகளில் கண்டனம் தெரிவிக்கிறொம் "
கோயிலின் கட்டுமானப் பணிகள் நவம்பர் 9, 2019 அன்று இந்தியாவின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் தொடர்ச்சியாகும், இந்தத் தீர்ப்பு, "நீதிக்கான கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2019 ல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு முக்கிய தீர்ப்பில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாபர் மசூதி-ராமர் ஜன்மபூமி தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தது.
அயோத்தியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் கோவில் கட்டுமானப் பணிகள் மே 26, 2020 அன்று தொடங்கின என்பது குறிப்பிடத்தக்ககது.
மொழியாக்கம்: அருள்ஜோதி