காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையை ஐ.நாவிடம் எடுத்துச்சென்ற பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள இந்தியா, தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐநா பொதுகூட்டத்தில் நேற்று ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதோடு மட்டுமல்லாமல், மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தின் போது பயங்கரவாதி பர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் எழுப்பினார். அப்போது, பர்ஹான் வானியை காஷ்மீரின் தலைவர் என்றும் அவர் நீதிக்கும் புறம்பான வகையில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையது அக்பரூதின் இதுக்குறித்து கூறியதாவது:- ஐக்கிய நாடுகள் சபை என்ற பெரிய தளத்தை பயன்படுத்தி இந்த விவகாரத்தை பாகிஸ்தான் தவறாக வழிநடத்த முயற்சிப்பது வருந்ததக்கது. பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் நாடான பாகிஸ்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கை உலக நாடுகளுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.