டோக்கியோ: இந்தியா - ஜப்பான் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டுக்கு சென்றார். டோக்கியோவில் அவர் இரு நாடுகளின் முக்கிய வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். 


இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து மோடி பேசியதாவது:-


இன்று தொழில் தொடங்குவதற்கு வியத்தகு வாய்ப்புகளை கொண்டதொரு நாடாக இந்தியா திகழ்கிறது. பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தொழில் துறையில் ஜப்பானிய முதலீடுகள் உள்ளே வருவதை விரும்புகிறோம்.   


உலக பொருளாதாரம் நலிவடைந்த நிலையிலும் மற்ற பெரிய நாடுகளையும் விட இந்தியா வேகமான பொருளாதார முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டுள்ளது. இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளால், ஏராளமான தொழில் வாய்ப்புகள் பெருகி உள்ளன. பொருட்களை தயாரிப்பதற்கான குறைந்த செலவு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்பு போன்றவை இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சிறந்த இடமாக மாற்றி இருக்கிறது.


இந்தியாவின் 10 ஆண்டு விசா திட்டம், சுற்றுலா மற்றும் வருகை விசா திட்டங்களை ஜப்பானியர்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.


இதைத்தொடர்ந்து ஜப்பான் மன்னர் அகிடோவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இந்தியா - ஜப்பான் இடையே நீண்டகால பாசப் பிணைப்பு, ஆசியாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர்.


பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயையும் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சிவில் அணுசக்தி உள்பட 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து:-


நேற்று இரு தலைவர்களும் சந்தித்து பேசிய பிறகு அவர்களுடைய முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 


இதன் மூலம் இரு நாடுகளின் பொருளாதார, பாதுகாப்பு உறவுகள் மேம்படுவதற்கும் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு அணுசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் அணுஉலைகளை அமைப்பதற்கும் வழி பிறந்துள்ளது.


இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, ஜப்பான் அரசு மற்றும் ஜப்பான் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.