ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதிக்கு 1 பில்லியன் டாலர்கள் கடனுதவி: பிரதமர் மோடி
ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியின் மேம்பாட்டிற்காக இந்தியாவின் சார்பில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
விளாடிவாஸ்டோக்: ரஷ்யாவிற்கு பயணம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று (வியாழக்கிழமை) கீழைப் பொருளாதார மன்றத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் தனது உரையில், 130 கோடி இந்தியர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறினார். இதற்காக அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். "அனைவருடன் சேர்ந்து அனைவருக்கனா வளர்ச்சி" என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் 2024 க்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியனாக மாற்றும் முயற்சியில் எங்கள் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பகுதியுடனான இந்தியாவின் தொடர்புகள் நீண்ட நெடுங்காலத்திற்கு முற்பட்டவை என்றும், பகுதி மேம்பாட்டிற்காக 1 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) தொகையை இந்தியா கடனுதவியாக வழங்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதன்மூலம் இரு நாடுகளிடையேயான உறவில் புதிய பரிமாணத்தை சேர்க்கும் எனவும் கூறினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்கு அங்கு வாழும் இந்தியர்கள் முக்கிய பங்களிப்பார்கள் எனவும் பிரதமர் தெரிவித்தார்.