2022 ஆம் ஆண்டில் G-20 உச்சி மாநாட்டை நடத்துகிறது இந்தியா, அர்ஜெண்டினா மாநாட்டில் பிரதமர் மோடியின் கோரிக்கை ஏற்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டை, வருகிற 2022 ஆம் ஆண்டில் இந்தியா நடத்த உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


G-20 நாடுகளின் உச்சிமாநாடு அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உட்பட ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


மாநாடு நிறைவு பெறுவதற்கு முன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2022 ஆம் ஆண்டில் G-20 உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்டார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை 2022 ஆம் ஆண்டில் கொண்டாட உள்ள நிலையில், அதனுடன் சேர்த்து G-20 உச்சிமாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் இந்த மாநாடு நடைபெற இருந்ததாகவும், தமது கோரிக்கையை ஏற்று 2022 ஆம் ஆண்டில் நடத்த அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பொருளாதார ரீதியாக இந்தியா அசுர வளர்ச்சியடைந்து வருவதாகவும், இந்தியாவின் பழமையான வரலாறு, பன்முகத்தன்மை, இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை அனுபவிக்க வருமாறும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது G-20 நாடுகளின் கூட்டமைப்பு. இதில் தொழில்வளம் மிக்க 19 நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இணைந்தன. ஆண்டுதோறும் இதன் உச்சிமாநாடு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. உலகளவில் 80 சதவீத வர்த்தகம் G-20 நாடுகளிடையே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.