பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதல் தொடரும், முப்படை அதிகாரிகள் கூட்டாக அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று முப்படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாகவும் முப்படை தளபதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.


இந்திய விமானப் படை தளபதி ஆர்.ஜி.கே.கபூர், தரைப்படைகளின் தளபதி சுரேந்திர சிங், கடற்படைத் தளபதி டி.எஸ்.குஜ்ரால் ஆகியோர் டெல்லி பாதுகாப்பு அமைச்சக வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க வந்த பாகிஸ்தானின் விமானங்களை விரட்டியடித்தது குறித்தும், கடந்த இரண்டு நாட்களாக எல்லையை ஒட்டிய 35 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சண்டைகள் குறித்தும் அவர்கள் விளக்கினர்.


தொடர்ந்து சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் எப்.16 ரக விமானத்தில் இருந்து இந்தியாவின் ரஜோரி பகுதியில் விழுந்த ஏவுகணையின் சிதறிய பாகங்களை ஆதாரமாக அவர்கள் எடுத்துக் காட்டினர். இந்திய ராணுவ நிலைகளை குறிவைக்கவில்லை என்ற பாகிஸ்தானின் பொய்யை அப்பட்டமாக மறுத்த முப்படைத் தளபதிகளும், தீவிரவாதிகளை பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதை நிறுத்தும் வரை தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.


நாட்டை பாதுகாப்பதில் உறுதி கொண்டிருப்பதாக விளக்கிய முப்படைத் தளபதிகள், பாகிஸ்தானின் எத்தகைய அச்சுறுத்தலையும், சவாலையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக கூறினர். அபிநந்தனை சர்வதேச சட்டங்களின்படி விடுவிக்க பாகிஸ்தான் முன்வந்தது குறித்தும் முப்படைத் தளபதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக பிரதமர் மோடியை சந்தித்த முப்படைத் தளபதிகளும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.