அருணாச்சல பிரதேசத்தில் சீன ஊடுருவல் குறித்து பாஜக எம்.பி. தபீர் காவ் கூறியதற்கு இந்திய ராணுவம் மறுப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேச மாநிலத்துக்குள் சீன ராணுவம் ஊடுருவியுள்ளதாக பாஜக எம்.பி. தாபிர் காவோ கூறியதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. 


பாஜக எம்.பி. புதன்கிழமை பேஸ்புக் பதிவில் சீன துருப்புக்கள் இந்திய எல்லைக்குள் 60 கிலோமீட்டருக்கு மேல் ஊடுருவி சீனாவின் எல்லையில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தில் கியோம்ரு ஓடை மீது மரப்பாலம் ஒன்றை அவர்கள் எழுப்பியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக சீன ராணுவத்தினர் அப்பகுதியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அருணாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசிடம் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அஞ்சா மாவட்டத்தின் தலைமையிடமான ஹயுலிங் பகுதிக்கும், சாக்லகாம் பகுதிக்கும் இடையே பாலம் எழுப்பவும் கோரிக்கை விடுத்துள்ளேன். அந்தப் பகுதியில் பாலம் எழுப்பப்பட்டால், இந்திய ராணுவ வீரர்கள் அங்கு எளிதில் சென்றுவர முடியும். இதன் மூலம் சீன ராணுவத்தினரின் ஊடுருவலைத் தடுக்க முடியும் என்றார் தாபிர் காவோ.


இவரின் இந்த கருத்துக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், பாஜக எம்.பி. குறிப்பிடும் பகுதியானது ஃபிஷ் டெயில் எனப்படுவதாகும். அந்தப் பகுதி எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பது குறித்து இன்னும் தெளிவாக முடிவெடுக்கப்படவில்லை. மழைக்காலங்களில் அப்பகுதியிலுள்ள ஓடைகளில் வெள்ளம் நிரம்பி காணப்படும். எனவே, அங்கு இருநாட்டு ராணுவத்தினரும் தற்காலிக பாலங்கள் அமைப்பது வழக்கமான நிகழ்வு. அந்தப் பகுதியில் சீன ராணுவத்தினரோ, மக்களோ நிரந்தரமாகத் தங்குவதில்லை. அந்தப் பகுதியை இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.