26 மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கு தடை... புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டது
26 வகையான மருந்துகள் மற்றும் பாராசிட்டமால், வைட்டமின் பி 1 மற்றும் பி 12 உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
புது டெல்லி: 26 வகையான மருந்துகள் மற்றும் பாராசிட்டமால் (Paracetamol), வைட்டமின் பி 1 மற்றும் பி 12 (Vitamin B1 and B12) உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, சில மருந்து பொருட்கள் (API) ஏற்றுமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் (DGFT) உரிமம் பெறுவது இப்போது அவசியம். இந்த மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இப்போது வரை எந்த தடையும் இல்லை. இனி அனுமதி பெற வேண்டும்.
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவியதால் ஏற்பட்டுள்ள அச்சத்தை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது. இந்தியா சீனாவிலிருந்து அதிக அளவு மருந்து பொருட்களை இறக்குமதி செய்தாலும், அதை குறைந்த அளவிலும் ஏற்றுமதி செய்கிறது.
கடந்த ஆண்டு, நாடு 2250 மில்லியன் ஏபிஐகளை (மருந்து பொருட்களை) ஏற்றுமதி செய்தது. அதே நேரத்தில், நாட்டில் ஆண்டுதோறும் ஏபிஐ இறக்குமதி 3.5 பில்லியன் டாலராக உள்ளது. இதில், சுமார் இரண்டரை பில்லியன் டாலர்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது, இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளைக் கண்காணிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ள பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவரிஸ்டி கருத்துப்படி, உலகளவில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் குறைந்தது 3,015 இறப்புகளும், உலகின் பிற பகுதிகளில் 267 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் குறைந்தது 1,200 பேருக்கு புதிதாக நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 124 பேர் இறந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.