கேரளாவில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கடந்த ஜீன் மாதம் முதல் மழை பெய்யத் தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத வகையில் தொடர்ச்சியாக கொட்டித் தீர்த்த கனமழையால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்புக்குழுவினர், கடற்படை, ராணுவம் உள்ளிட்டோரின் முயற்சியால் மீட்கப்பட்டனர். 


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உலகம் முழுவதுமிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டன. வெள்ளத்தால், சேதமடைந்த சாலைகள், வீடுகள் சீரமைக்கும் பணிகள் முழுமையடையாத நிலையில், கேரள மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது..... 


பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாளை மறுநாள் பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், வயநாடு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் 64.4 மி.மீட்டர் முதல் 124.4 மி.மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.