யாரை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர் என உ.பி.யில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என இந்தியர்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர் என்பதையே, திரண்டிருக்கும் கூட்டம் காட்டுவதாகக் குறிப்பிட்டார். புதிய இந்தியா பற்றிய தொலைநோக்கு பார்வை கொண்டவர்களுக்கும், கொள்கை உறுதியற்றவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது என அவர் குறிப்பிட்டார்.


காங்கிரஸ் அறிவித்துள்ள மாதம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கும் திட்டம் கேலிக்கூத்தானது எனக் கூறினார். ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகளை தாம் தொடங்கியபோது அதைக் கேலி பேசியவர்கள், இன்று அதே கணக்கில் பணம் செலுத்தப்போவதாக கூறுவதாகவும் விமர்சித்தார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த இந்தியாவையும், அதன் பிறகு உள்ள இந்தியாவையும் ஒப்பிட்டு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். வாரிசு அரசியலை முன்னெடுக்கும் ஊழல் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா பின்னடைவை சந்திக்கும் என எச்சரித்த பிரதமர், எல்லைக்கு அப்பால் தீவிரவாத முகாமை தாக்கியது பற்றி கேள்வி எழுப்புவதாகக் கூறினார்.



நாட்டின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், பாகிஸ்தானில் யார் ஹீரோ ஆவது என எதிர்க்கட்சிகள் போட்டி போடுவதாகவும் விமர்சித்தார். இந்தியாவின் ஹீரோக்கள் வேண்டுமா, பாகிஸ்தானின் ஹீரோக்கள் வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனையை நடத்த வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் அரசு அதைத் தள்ளிப்போட்டதாகவும் குற்றம்சாட்டினார்.


21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவை வலிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு இந்த முடிவு நீண்ட காலத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டியது என்றும் அவர் கூறினார். ஆனால் முடிவு எடுக்கப்படாமல் காங்கிரஸ் அரசால் தாமதப்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.