ஜம்மு-வில் நடப்பதை மறைக்க விரும்புகிறதா மத்திய அரசு -அசோக் கெலாட்!
ஜம்மு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருப்பது, ஸ்ரீநகரில் மத்திய அரசு எதை மறைக்க விரும்புகிறது என சந்தேகத்தை எழுப்புகிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்!
ஜம்மு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருப்பது, ஸ்ரீநகரில் மத்திய அரசு எதை மறைக்க விரும்புகிறது என சந்தேகத்தை எழுப்புகிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்!
ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது, ஆனால் அது உண்மை என்றால் எதிர்க்கட்சித் தலைவர்களை ஸ்ரீநகர் விமான நிலையத்தை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்து அவர்களை மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பியது ஏன்?. மோடி தலைமையிலான மத்திய அரசு எதை மறைக்க விரும்புகிறது? என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய மக்களின் நம்பிக்கையை மத்திய அரசு வேண்டும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய அரசு அழைத்துக்கொண்டு போய் ஸ்ரீநகரில் சுற்றிப் பார்க்க அனுமதிக்க வேண்டும். அப்படி எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய அரசு அனுமதித்தால் அவர்கள் ஸ்ரீநகருக்கு சென்று நிலைமையை நேரில் பார்த்து திரும்பியபின் இந்தியா முழுமைக்கும் உண்மையை சொல்லி இருப்பார்கள். மக்கள் மத்தியில் அரசின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என கெலாட் தெரிவித்துள்ளார்.
வங்கதேச யுத்தம் நடந்தபோது அப்பொழுது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் தனித்தனி அணியாக பிரித்து பல்வேறு நாடுகளுக்கு நேரில் சென்று உண்மையைத் தெரிவிக்க அனுப்பினார்கள். அதேபோன்ற அணுகுமுறையை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சட்ட விதி 370 ரத்து செய்த பின்னர், மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். அதற்கு பதிலாக ஸ்ரீநகருக்கு தாங்களாகவே சென்று உண்மையை அறிய விரும்பும் எதிர்க்கட்சித் தலைவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பியுள்ளது.
ஸ்ரீநகர் மக்களுடன் பேசி திரும்ப மத்திய அரசு உதவி இருந்தால் இந்தியாவிலும் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் வலுவாக உள்ளது என்பதை காட்டும் அறிகுறியாக அமைந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களை நகருக்குள் நுழைய விடாமல் தடுத்து மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.