டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு விசாரணைக்கு சென்று வெறுங்கையோடு திரும்பினர். அடுத்த 2 மணி நேரத்தில் விசாரணைக்கு சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீசை அவரது வீட்டில் ஒட்டிச் சென்றனர். ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.


அவர் இருக்குமிடம் குறித்த தகவல் எதுவும் 24 மணி நேரமாக வெளியாகாமல் இருந்த நிலையில் நேற்று இரவு 8.15 மணி அளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைமறைவாக எங்கும் செல்லவில்லை என்றும், வழக்கு தொடர்பாக கடந்த இரு நாட்களாக வழக்கறிஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தாகவும் கூறினார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தம் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கைகளில் தமது பெயர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 5 நிமிடங்கள் மட்டுமே பேட்டி கொடுத்த சிதம்பரம் செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


அடுத்த 15 நிமிடங்களில் அவரது வீட்டை சிபிஐ அதிகாரிகள் முற்றுகையிட்டனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, நுழைவு வாயில் மூடப்பட்டிருந்தால் சிபிஐ அதிகாரிகள் ஏழு பேர் சுவர் ஏறி குதித்து சிதம்பரத்தை கைது செய்தனர். நீதிமன்றம் கொடுத்துள்ள வாரண்ட் அடிப்படையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் சிபிஐ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவுடன், அங்கு மருத்துவக் குழுவினர் வந்தனர். அவர்கள் சிதம்பரத்தின் உடல்நிலையை பரிசோதித்தபின், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.பின்னர் சிபிஐ விருந்தினர் விடுதியின் 5வது அறையில் இரவில் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டார். இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்செய்யப்பட உள்ளதாகவும், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்திருந்தது..


தற்போது, சிதம்பரம் கைது செய்யப்பட்டுவிட்டதால், ஜாமீன் கோரி டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் அவர் சார்பில் மனு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார்.