ப.சிதம்பரத்தை மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க அனுமதி
ப. சிதம்பரத்தை செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.
புதுடெல்லி: சிபிஐ தரப்பில் ஐந்து நாட்கள் கேட்டநிலையில், ப. சிதம்பரத்தை செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அடுத்த நாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையடுத்து மீண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார் ப. சிதம்பரம், மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார் ப. சிதம்பரம். அப்பொழுது சிபிஐ தரப்பில் மேலும் ஐந்து நாட்கள் ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு நீதிபதி, மீண்டும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனக்கூறும் நீங்கள் முன்பு 5 நாட்கள் மட்டுமே ஏன் கேட்டீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சிபிஐ தரப்பு வக்கீல், ஆவணங்களைப் பொறுத்து சிதம்பரம் பதிலளிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது கணிக்கமுடியாததால், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புகிறோம் எனக் கூறினார்.
சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் கூறுகையில், பண பரிமாற்றத்தின் ஒரு ஆவணமும் எங்களிடம் இதுவரை கொடுக்கப்படவில்லை. சிதம்பரத்திற்கு 3 கோப்புகள் காட்டப்பட்டுள்ளன. 400 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் இடைநிறுத்தாமல் பதிலளிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து ப. சிதம்பரத்தை செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.