ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஆம்ஸ்டர்டாமில் பறிமுதல் செய்யப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஆம்ஸ்டர்டாமில் பறிமுதல் செய்யப்பட்டது. ஐரோப்பாவைச் சேர்ந்த சரக்கு சேவை நிறுவனம் ஒன்று குத்தகை நிலுவை காரணமாக இந்த விமானத்தை பறிமுதல் செய்துள்ளதாக தெரிகிறது.


ஆஸ்ம்டர்டாம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விமானம் போயிங் 777-300 இஆர் ரக விமானம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏற்கெனவே குத்தகை பாக்கி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நான்கில் மூன்று பங்கு விமானங்கள் முடக்கப்பட்டுள்ளன. 


மொத்தம் உள்ள 123 விமானங்களில் தற்போது 25 விமானங்கள்தான் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சரக்கு சேவை பணியில் ஈடுபடுத்தப்பட்ட விமானமும் தரையிறக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் தற்போது ஆம்ஸ்டர்டாமில் தரை இறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 16,000 பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பகுதியளவு சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை விமானிகளில் ஒரு பிரிவினர் ஊதியம் கேட்டு நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து அதன் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி விலகிய நிலையில் இதன் கட்டுப்பாட்டை கடன் வழங்கிய எஸ்பிஐ நிர்வாகம் நிர்வகிக்கிறது.


நிர்வாகக் காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக நிறுவனம் அறிக்கை வெளியிட்டாலும், கடுமையான நிதிப் பற்றாக்குறையில் இந்நிறுவனம் சிக்கி தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.