ஜார்கண்ட்: கும்பலாக அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்கள்
பீஹாரில் கடந்த சில மாதங்களுக்கு முன் தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக கிண்டல் செய்த ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் நகரின் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் கும்பலாக அமர்ந்து எழுதியுள்ளனர்.
கடந்த 9-ம் தேதி, நடந்த இந்த தேர்வில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதினர். பள்ளியில் போதிய இடம் இல்லை எனவும், இதனால் அருகருகில் அமர்ந்து தேர்வு எழுதியதாக மாணவர் ஒருவர் கூறினார். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தேவைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் இல்லை என ஆசிரியர்கள் கூறினர்.
அப்பள்ளியின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில்:- மாணவர்கள் முறைகேடு செய்யவில்லை. மாணவர்கள் நேர்மையாக தேர்வு எழுதினர். பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை. 2 மாணவர்கள் அமர வேண்டிய நிலையில், 4 அல்லது 5 மாணவர்கள் அமர்ந்துள்ளனர் எனக்கூறினார். தேர்வின் போது மாணவர்கள் மொபைல் போன் வைத்திருந்தனர். ஆனால், அவற்றை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என அந்த பேராசிரியர் கூறினார்.