கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்வு தொடர்பாக JNU மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார் மற்றும் உமர் காலித் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினை கண்ணய்யா குமார் மற்றும் உமர் காலித் எதிர்க்கொண்டுவரும் நிலையில், மத்திய டெல்லியில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உமர் காலித்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 



இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் அவர் காயமின்றி உயிர் தப்பினார் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


இச்சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கையில் உமர் காலித் கிளப்பினுள் நுழையும்போது இரண்டுமுறை துப்பாக்கிசூடு நடைப்பெற்றது. அடையாளம் தெரியாத வகையில் துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த மர்ம நபர், உமர் காலிதை நோக்கி சுடுகையில் அவருது நிலை தடுமாறியதில் அவரது குறி தப்பியது. பின்னர் அவரை பிடிக்க முயற்சிக்கையில் அவரது கையில் இருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டது, எனினும் மர்ம நபர் தப்பிச்சென்றார், என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து டெல்லி காவல்துறையின் இணை கண்காணிப்பாளர் அஜய் சௌதிரி தெரிவிக்கையில்., தப்பிச்சென்ற மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட கைத்த்துப்பாக்கியினை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.