அக்பரின் மனைவிகளில் ஒருவரும் புகழ் மிக்க ராஜபுத்திர இளவரசியுமான ஜோதாபாய் வரலாற்றிலும், ராஜ புத்திரக் கதைகளிலும் சித்தரிக்கப் பட்டுள்ளவாறு அவர் ஒரு இந்து ராஜபுத்திர வம்சத்துப் பெண் அல்ல, ஜோதாபாய் ஒரு பிறவி போர்த்துகீஸியப் பெண்மணி என்று சான்றுகளைக் காட்டி ஒரு புத்தகமே வெளியிட்டிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது பெயர் லூயிஸ் டி அஸிஸ் கோரியா. கோவாவைப் பின்புலமாகக் கொண்ட இந்த எழுத்தாளர், தான் எழுதிய 1510 முதல் 1735 வரையிலான போர்த்துகீசியர்களின் இந்திய மற்றும் முகலாயத் தொடர்புகள் எனும் வரலாற்றும் நூலில் மேற்கண்டவாறு விவாதிக்கிறார்.


அவரது நூலில் சொல்லப்பட்டவாறு, ஜஹாங்கீரின் அம்மாவான ஜோதாபாய், ஒரு இந்து ராஜபுத்திரப் பெண்மணியே அல்ல, அவர் ஒரு போர்த்துகீஸியப் பெண்மணி, அவரது இயற்பெயர் டோனா மரியா மஸ்காரன்சஸ், அரபிக் கடலில், போர்ச்சுகீஸியப் போர்க்கப்பலில் தனது சகோதரியான ஜூலியானாவுடன், டோனா மரியா பயணம் செய்த போது 1500-ம் ஆண்டு வாக்கில் குஜராத் சுல்தானாக இருந்த பகதூர் ஷாவால் கைதியாகக் கைப்பற்றப் பட்டு, இளம் முகலாய மன்னரான அக்பருக்கு வெகுமதியாக அளிக்கப் பட்டார்.


அக்பரை வந்தடைவதற்கு முன்பே டோனாவுக்கு திருமணம் ஆகி இருந்தது. குஜ்ராத் சுல்தானால் வெகுமதியாக அறிவிக்கப்பட்டு அக்பரின் அரசவையில் நிற்கும் போது டோனாவுக்கு வயது 17 அக்பருக்கு 18 வயது. டோனாவைக் பார்த்துமே அக்பர் காதலில் விழுந்தார். டோனா அப்போதே மணமானவராக இருந்தாலும், இனிமேல் டோனா எனது அந்தப்புறத்திற்குச் சொந்தமானவர் என்று அறிவித்து விட்டார் அக்பர். 


எனவே, அன்று முதல் டோனாவும் அவரது சகோதரி ஜுலியானாவும் அக்பரின் சரித்திரப் புகழ் மிக்க அந்தப்புரப் பிரஜைகள் ஆனார்கள் என்று நீள்கிறது லூயிஸ் டி கோரியாவின் புத்தகம்.


அக்பரது காலத்தில் போர்த்துகீசியர்கள் அவர்கள் இணத்து பெண் ஒரு முகலாய அரசரின் அந்தப்புரப் பாவையாக இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரத்தில் முகமதிய சமயக் குருமார்களும் ஒரு போர்த்துகீசியப் பெண் தங்களது மாமன்னரின் மனைவியாக இருப்பது வரலாற்றில் பதிவாவதை விரும்பவில்லை. இப்படித்தான் டோனா எனும் கத்தோலிக்கன் கிறிஸ்தவப் பெண்மணி ஜோதா அக்பர் எனும் ராஜபுத்திரப் பெண்மணியாக முகமதிய மற்றும் ஆங்கில வரலாற்று ஆசிரியர்களால் அந்நாட்களில் உருமாற்றம் செய்யப்பட்டார் என லூயிஸ் டி தனது நூலில் கூறுகிறார்.


173 பக்கங்கள் கொண்ட லூயிஸின் இந்தப் புத்தகம் பிராட்வே பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் அவர் தெரிவித்துள்ளபடி, ஜஹாங்கீரின் தாயாக அந்தக் காலத்தில், சுட்டிக்காட்டப்பட்ட மரியம் உல்- ஜமானி என்பவர் டோனா மரியா தானே தவிர ஜோதா அல்ல என்கிறார். அப்படி மரியம் உல்- ஜமானி ஜஹாங்கீரின் தாயாக இருந்தால், அவரைப் பற்றிய குறிப்புகள் ஏன் முகலாய ஆவணங்களில் இல்லை எனும் கேள்விக்கு, திட்டமிட்டு டோனாவின் பெயர் சரித்திர ஆவணங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.


மேலும், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக சரித்திரப் பேராசிரியரான சிரீன் மூஸ்வி, தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அக்பர் நாமாவில் எங்கேயும் ஜோதா பாயைப் பற்றிய குறிப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளமையையும் லூயிஸ் தனது வாதத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் மேற்கோள் காட்டுகிறார். சிரீன் கூற்றுப்படி, அக்பர், ராஜபுத்திர இனக்குழுக்களில் ஒன்றான கச்சாவா இனத்து இளவரசியை மணந்ததாக குறிப்புகள் உள்ளனவே தவிர, அந்த இளவரசியின் பெயரும் கூட ஜோதாபாய் அல்ல! என்று சுட்டிக்காட்டுகிறார்.


எனவே லூயிஸ் விவாதித்தவாறு, ஜோதாபாய் தான் டோனா மரியா என்று ஏற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ நமது வரலாற்று ஆசிரியர்களிடையே தற்போது போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை.