நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்த அமித் ஷா!!
ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி, கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார். ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். கூட்டணியை கலைத்த சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதைக்குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது இல்லத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரை நேற்று சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.
தேசிய ஜனநாய கூட்டணியில் கூடிய விரைவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இணையும் எனத் தெரிகிறது. பாராளுமன்றத்தில் 12 உறுப்பினர்களும், மக்களவையில் 2 பேர் மற்றும் ராஜ்யசபாவில் 10 பேர் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் உள்ளனர்.
பி.ஜே.பி உடனான கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.