‘இவங்களுக்குதான் ஆதரவு’....போட்டுடைத்த ஜெடிஎஸ் முக்கிய புள்ளி
Karnataka Election Result 2023: யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றிய முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, இரு முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. சமீபத்திய நிலவரப்படி, காங்கிரஸ் 115 இடங்களிலும் பாஜக 78 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. எச்.டி.குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று கணித்திருந்தன. தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில், ஜேடிஎஸ் கட்சியின் நிலைப்பாடு மிக முக்கியமாகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களை அணுகியுள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறியுள்ளது. இரு கட்சிகளும் தங்களை அணுகியுள்ள நிலையில், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றிய முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், சரியான நேரத்தில் அதை பொதுமக்களுக்கு அறிவிப்போம் என்றும் அந்த தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளுமே தாங்கள் ஜேடி(எஸ்) -ஐ இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறி வருகின்றனர். இரு கட்சிகளுமே தங்களுக்கு தனிப்பெரும்பான்மை வரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன.
முன்னதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகவின் ஷோபா கரந்த்லாஜே, "கூட்டணி என்ற கேள்வியே இல்லை, பாஜக ஜேடி(எஸ்) உடன் தொடர்பு கொள்ளவில்லை. நாங்கள் 120 இடங்களைப் பெறுவது உறுதி. எங்கள் கள வீரர்கள் இதை உறுதி செய்துள்ளனர்" என்று கூறினார்.
எனினும், இரு முக்கிய கட்சிகளும் தங்களை தொடர்பு கொள்ளும் சக்திவாய்ந்த நிலையில் தாங்கள் உள்ளதாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறியுள்ளது. "கர்நாடக மக்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக இரு தேசிய கட்சிகளையும் நாங்கள் கண்காணிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் ஒரு பிராந்திய கட்சியான நாங்கள் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக உழைக்க விரும்புகிறோம்.” என்று ஜேடி(எஸ்) தலைவர் மேலும் தெரிவித்தார்.
எந்த கட்சி கர்நாடகா மற்றும் கன்னடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடப் போகிறார்களோ அவர்களுக்கே தங்கள் ஆதரவு என்றும் அதற்கான முடிவும் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
"எங்கள் கட்சி இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. அந்த அளவு எங்களுக்கு வாக்குகள் வரும். எங்களால் தேசிய கட்சிகளுடன் பண பலம் மற்றும் ஆள் பலத்தில் போட்டியிட முடியாது. ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அளவுக்கு நாங்கள் செயல்பட்டுள்ளோம் என்பது எங்களுக்குத் தெரியும்". என்று அந்த தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடக தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு 10ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்களித்தனர். தேர்தலில், மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குகள் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டன.
மாலைக்குள் நிலைமை புலப்படும்:
தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது எதையும் சொல்வது கடினம். இன்னும் சில மணி நேரங்களில் தொகுதிகளின் வெற்றியாளர்கள் பற்றிய துல்லிய முடிவுகள் தெரிந்தபின்னர், ஜெடிஎஸ் கட்சி உண்மையாகவே கிங் மேக்கர் ஆகுமா அல்லது தேசிய கட்சிகளில் ஒன்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்குமா என்பது தெளிவாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ