பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ-க்கள் 16 பேர் கடந்த வாரம் ராஜிநாமா செய்தனர். ராஜிநாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகர் தாமதப்படுத்துவதாக 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், ராஜிநாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும், அதேசமயம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏ-க்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.  சபாநாயகர் சுதந்திரமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்றும், அவருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை என்றும் கூறிய நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டசபைக்கு வருமாறு நிர்பந்திக்க கூடாது என்றும் குறிப்பிட்டனர்.


மேலும், சபாநாயகர் எந்த முடிவு எடுத்தாலும் அதனை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், அரசியல் சாசன சமநிலையை நீதிமன்றம் கடைபிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கேள்விகளுக்கு பின்னர் இறுதி தீர்ப்பில் விடை அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக சட்டப்பேரவை நேற்று கூடியது. அப்போது பேரவையில் பேசிய சித்தராமையா, குழப்பமான சூழல் நிலவுவதால் ஒரே நாளில் முடிவெடுப்பது சரியாக இருக்காது என்று கூறினார். இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பின்னர் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடாகவில் நிலவும் குழப்பமான சூழலுக்கு யார் காரணம் என்பது அனைவருக்கு தெரியும் என்று பேசினார். இதனையடுத்து ஏற்பட்ட அமளியால் சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். சபாநாயகரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இரவு முழுவதும் சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.


நேற்று மாலை ஜெகதீஷ் ஷெட்டார், அரவிந்த் லிம்பாவாலி, பசவராஜ் பொம்மை, எஸ்.ஆர். விஸ்வநாத் மற்றும் என் ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பாஜக தூதுக்குழு நேற்று ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து, கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். 


இதன்பின்னர் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள, அம்மாநில ஆளுநர் இன்று 1.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாததால், மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.


நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கவர்னரின் உத்தரவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார் குறிப்பிடத்தக்கது.