காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி இடைத்தேர்தலில் வெற்றி
கடந்த ஜனவரி 7-ம் தேதி ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முப்தி முகமது சையத் உயிரிழந்தார். எனவே மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏக்கள் முப்தியின் மகள் மெகபூபா முப்தியை தலைவராக தேர்ந்தெடுத்தனர். கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜகவும் மெகபூபா முப்தி முதல் மந்திரியாக பதவியேற்க ஒப்புதல் தெரிவித்தது.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக அண்மையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து முப்தியின் மறைவால் காலியான அனந்த்நாக் தொகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்றில் இருந்தே, மெகபூபா முப்தி முன்னிலை வகித்தார். அண்மையில் கிடைத்த தகவலின் படி காங்கிரஸ் வேட்பாளர் ஹிலால் அகமது ஷாவை விட 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
மெகபூபாவின் இந்த வெற்றிக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.