காஷ்மீரின் 10 மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமையான இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் இன்று மீண்டும் ஏற்பட்ட கலவரத்தால் ஒருவர் பலியானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத இயக்க தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் கலவரம் ஏற்பட்டது. 80 நாட்களாக பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு அவ்வப்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.


இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரிவினைவாத தலைவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தனர். இதனால் அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 10 மாவட்டங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் நேற்று முதல் 72 மணிநேரத்துக்கு இணையதளம் மற்றும் செல்போன் சேவைகளுக்கும் அம்மாநில அரசு தடை விதித்தது.


இன்று பாண்டிப்பூர் பகுதியில் பிரிவினை வாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். பொதுமக்கள் பலர் காயம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலையே நிலவுகிறது. பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் சூழ்நிலையை கண்காணித்து வருகின்றனர். 


பக்ரீத் நாளான இன்று மார்க்கெட் பகுதியில் கடைகள் மூடப்பட்டு வெறிச் சோடி கிடந்தது. இனிப்பு கடைகளும், பேக்கரிகளும் மூடப்பட்டு இருந்தது. ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹஸ்ரத் பால் வழிபாட்டு தலத்தில் தொழுகை நடைபெற வில்லை. ஆங்காங்கே உள்ளூரில் உள்ள மசூதி களில் தொழுகை நடத்து மாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.