காஷ்மீர் பிரிவினைவாத பெண் தலைவர் ஸ்ரீநகரில் கைது
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், உள்பட 22 சமூக வலைதளங்களை காஷ்மீர் அரசு அதிரடியாக தடை செய்துள்ளது. 22 சமூக வலை தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒரு மாதம் அல்லது மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே. கோயல் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய டெலிகிராப் சட்டம் 1885 படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த பெண் தலைவர் ஆசியா அந்திராபியை ஸ்ரீநகர் போலீசார் இன்று கைது செய்தனர்.
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காலையில் அவரை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு படையினர் மீது பெண்கள் கல்வீசுவதற்கு தூண்டுதலாக இருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.