நாட்டை உலுக்கிய கத்துவா பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால், பதான்கோட் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கத்துவாவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் சிறுமியை 4 நாட்கள் அடைத்துவைத்து, மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை சிதைத்து அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்தனர். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர். 


இதனிடையே இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் 2 அமைச்சர்கள் உட்பட இந்துத்துவா அமைப்பினர் நடத்திய போராட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் கிரைம் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 


இந்நிலையில் இந்த வழக்கின் இன்று காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதால், பதான்கோட் செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.