BSNL தொழிலாளர்களுக்கு ஊதியம் பெற்று கொடுங்கள் -பினராயி!
BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் தரப்படாத விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார்.
BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் தரப்படாத விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
BSNL நிறுவனத்தில் ஏறக்குறைய 1.7 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்கள் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் அளிப்பதற்கு தேவையான பணம் இல்லை என BSNL நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து BSNL நிறுவனம் மத்திய அரசிடம் அளித்துள்ள அறிக்கையில், ஏறக்குறைய ரூ.13,000 கோடி அளவிற்கு நிலுவை தொகை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ரூ.850 கோடி ஜூன் மாத சம்பள தொகையை ஊழியர்களுக்கு அளிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.
BSNL அளித்துள்ள புள்ளி விபரத்தின்படி, கடந்த 2008-09 நிதியாண்டில் தான் கடைசியாக ரூ.575 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து வருவாய் படிப்படியாக சரிந்து வந்துள்ளது. 2017-18 ம் ஆண்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.22, 668 கோடி அளவிலேயே நிறுவனத்தின் வருவாய் இருந்துள்ளது. இதன் காரணமாக 2018-19 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் கடன்தொகை ரூ.14,000 கோடி ஆக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்நிறுவனத்தின் நஷ்ட தொகை ரூ.90,000 கோடியை தாண்டி உள்ளது. அதிகமான ஊழியர்கள், மோசமான நிர்வாகம், தேவையற்ற தலையீடுகள், தாமதமான நவீனமயமாக்கல் திட்டங்கள் ஆகியன BSNL நிறுவனத்தின் நஷ்டத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கேரளாவில் பணிபுரியும் BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் தரப்படாத விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன், தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.