பிரதமர் நரேந்திர மோடியை புகழந்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூரிடம் விளக்கம் கேட்கப்படும் என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் “மக்களை சென்றடைக்யகூடிய மொழியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். எதற்கெடுத்தாலும் அவரை விமர்சனம் செய்வது ஒருபோதும் உதவாது” என பேசினார்.


ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு ஆதரவாக திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில் “பிரதமர் நரேந்திர மோடி நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது பாராட்ட வேண்டும். தவறான திட்டங்களை கொண்டு வரும்போது எதிர்க்க வேண்டும். கண்களை மூடிக் கொண்டு மோடியை எதிர்ப்பது சரியல்ல” என தெரிவித்தார்.


இதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடன் தெரிவிக்கையில்., "காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதை ஏற்க முடியாது. அவர் எதற்காக இப்படி பேசினார் என்பது தெரியவில்லை.


இருப்பினும் இதுபோன்ற கருத்துக்களை ஏற்க முடியாது. நிச்சயமாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுப்போம்" என தெரிவித்துள்ளார்.


கடந்த ஜூன் மாதம், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி முகப்புத்தகத்தில் பதிவிட்ட கேரளா காங்கிரஸ், ஏ.பி. அப்துல்லக்குட்டி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.